paris olympics:வினேஷ் போகத் தகுதி நீக்கம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகர்ந்தது பதக்கக் கனவு!

Advertisements

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.

புதுடெல்லி:பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று களம் புகுந்தார். தனது முதல் சுற்றில், முந்தைய ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக 82 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட யு சுசாகியின் பேராதிக்கத்துக்கு வினேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கால்இறுதியில் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை 7-5 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார். நேற்று இரவில் அரங்கேறிய அரைஇறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றார்.

இந்த நிலையில், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் (அதாவது கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாகத் தகவல்) இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒலிம்பி மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், தற்போது 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தைச் சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட உள்ளது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கான பதக்கம் தற்போது பறிபோகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *