Gangakulam: விவசாயி மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் கைது!

Advertisements

விவசாயி மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் கைது !

திருவில்லிபுத்தூர்: கிராம சபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏவிடம் கேள்வி கேட்ட விவசாயி மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளம் கிராமத்தில் நேற்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சித்தலைவர் பூங்கொடி, திருவில்லிபுத்தூர் யூனியன் பற்றாளர் வசந்தி, ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்துகொண்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

அப்போது வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி அம்மையப்பன்(54), கிராமசபை கூட்டம் சுழற்சி முறையில் கிராமங்களில் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். மேலும், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இங்கேயே பணியாற்றி வருவது குறித்து எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி, எம்எல்ஏ, அதிகாரிகள் முன்னிலையில் வேகமாகப் பாய்ந்து வந்து விவசாயி அம்மையப்பனை மார்பில் எட்டி உதைத்தார்.

அப்போது அருகிலிருந்து மற்றொருவரும், அவரைத் தாக்கினார். மேலும், அம்மையப்பனை அவதூறாகத் திட்டியதோடு தங்கப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனையடுத்து அம்மையப்பன் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார், ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இந்நிலையில் விவசாயியைத் தாக்கிய ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியை, விருதுநகர்கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், திருவில்லிபுத்தூர் திட்டப் பிரிவு பிடிஓ மீனாட்சி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *