
சமயபுரம் கோவிலில் மணியமாக பணியாற்றவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் தயாளுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, சமயபுரம் கோவிலில் மணியமாக பணியாற்றவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததால், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். விசாரணை நேர்மையாக நடைப்பெற வேண்டும் என்பதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், விசாரணைக்கு பின்பு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரமேஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் எலி நடமாட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பிரச்சனைகளை சரி செய்து உட்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டார். சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என்று கூறினார்.



