பனாஜி: கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
தெற்கு கோவா தொகுதியில் பா.ஜ., சார்பில் பல்லவி (49) என்பவர் போட்டியிடுகிறார். இதற்காக அவர், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் சொத்துகுறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார். அதில், கணவருடன் சேர்ந்து தனக்கு ரூ.1,400 கோடி சொத்து உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் கூறப்பட்டு உள்ளதாவது: பல்லவிக்கும், கணவர் ஸ்ரீநிவாஸ் டெம்போவுக்கும் கால்பந்து, ரயில் எஸ்டேட், கப்பல் கட்டும் தொழில், கல்வி முதல் சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளோம். பல்லவிக்கு சொந்தமாக ரூ.255.4 கோடி மதிப்பு அசையும் சொத்து உள்ளது. இவரின் அசையா சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.28.2 கோடி.
ஸ்ரீநிவாசுக்கு ரூ.994.8 கோடி மதிப்பு அசையும் சொத்து உள்ளது. இவரின் அசையா சொத்தின் சந்தை மதிப்பு ரூ.83.2 கோடி ஆகும். கோவாவில் உள்ள சொத்துகளைத் தவிர்த்து நாட்டின் பல பகுதிகளிலும் இந்தத் தம்பதிக்குச் சொத்து உள்ளது. இதனைத் தவிர்த்துத் துபாயில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள குடியிருப்பும், லண்டனில் ரூ.10 கோடி மதிப்புள்ள குடியிருப்பும் உள்ளது. பல்லவியிடம் ரூ.5.7 கோடி மதிப்பு தங்கம் உள்ளது. புனே பல்கலையில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


