
இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரை நிறுத்தும் பணிகளை ஆரம்பிக்கிறது. சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதேபோல பாகிஸ்தானுக்கு செல்லும் குனார் நதி நீரை ஆப்கானிஸ்தான் தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஹல்காமதாக்குதலைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. அப்போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. அதாவது பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா தனது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதிக்கு வரும் நீர்வரத்துக் கணிசமாகக் குறையும். ஏற்கனவே ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இது நிலைமையை மேலும் மோசமாக்கும்.. ஆப்கானிஸ்தான் டைம்ஸ் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது
ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் நீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், அங்கு விவசாயிகளின் நீர் தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த நதி பாகிஸ்தானுக்குள் பாயும் மிகப்பெரிய நதிகளில் ஒன்றாகும்.சிக்கல் சிந்து நதியைப் போலவே, குனார் நதியும் விவசாயம், குடிநீர் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஒரு முக்கிய ஆதாரமாக பாகிஸ்தானுக்கு இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மோதல்களில் முக்கிய மையமாக இந்த நதி உருவாகும் கைபர் பக்துன்க்வா பகுதி இருக்கிறது. இந்த நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கு முன் குனார் நதியில் அணைகளைக் கட்டுவதே ஆப்கானிஸ்தான் திட்டம். அதன் மூலம் ஆப்கானிஸ்தான் தனது சொந்த நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யத் திட்டமிடுகிறது.
இருப்பினும், இது பாகிஸ்தானை மிகக் கடுமையாகப் பாதிக்கும். மேலும், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே இந்த நதி நீரைப் பகிர்வது தொடர்பாக எந்தவொரு நதி நீர் ஒப்பந்தமும் இல்லை. அதாவது, தாலிபான் அரசை இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கச் செய்ய பாகிஸ்தானுக்கு எந்தவொரு சட்டப்பூர்வ வழியும் இல்லை.


