பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு கட்டண தரிசனம் ரத்து!

Advertisements

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வருகிற பிப்ரவரி 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்குச் செய்யவேண்டிய ஏற்பாடுகள்குறித்து அனைத்து அரசுத் துறைகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி, சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பொதுப்பணி, வருவாய், நெடுஞ்சாலை, போக்குவரத்து, மின்சாரம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சாலை, போக்குவரத்து, மின்சாரம், ஓய்விடம், உணவு, கழிப்பறை மற்றும் பல்வேறு வசதிகள் குறித்தும், இதுவரை செய்துள்ள வசதிகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

அதன்பின் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, கடந்த ஆண்டு தைப்பூச திருவிழாவில் 12 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இந்த ஆண்டு அதைவிட அதிகமாகப் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு பல்வேறு முன்னேற்பாடு பணிகளைச் செயல்படுத்தி வருகிறோம்.

அதன்படி திருவிழா நடைபெறும் 10 நாட்களில் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம் செய்ய உணவுத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவித்தது கடந்த ஆண்டு ஏற்பட்ட சில இடர்பாடுகளை முன்வைத்துதான் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அதுகுறித்து பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுக்கப்படும். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு கட்டணம் இல்லாமல் பக்தர்கள் இலவசமாகத் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

பக்தர்கள் வருகையை முன்னிட்டு பழனியில் செயல்படும் தங்கும் விடுதிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து முறைப்படி ஆலோசனை நடத்தி முடிவு செய்ய மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.

பக்தர்களின் வருகையைப் பொறுத்து போக்குவரத்து அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம்குறித்து முடிவு செய்யப்படும். தைப்பூசத் திருவிழா காலங்களில் பழனி நகரில் இலவச போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம் கோவிலில் 50 சென்ட் இடம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனத் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 1930-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் தெரிவித்துள்ளபடியும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு குறித்தும் நடுநிலையோடு அரசு செயல்பட்டு வருகிறது.

கேள்விகள் கேட்பதும், அதற்குப் பதில் சொல்வதும் சுலபம். ஆனால் அமைச்சர் என்ற முறையில் தான் சொல்லக்கூடிய வார்த்தை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இதனால் மத மோதல்களைத் தவிர்க்கும் வகையிலேயே பேசுகிறேன். எனவே அதே பொதுநல நோக்கத்தோடு ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் செயல்பட வேண்டும்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பூங்கொடி, சச்சிதானந்தம் எம்.பி., அறநிலையத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், எஸ்.பி. பிரதீப் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *