
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், அந்நாட்டிற்கு எதிராக எந்த மாதிரியாக நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் குழுவினர், கடந்த 22ஆம் தேதி சுற்றுலா பயணிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தலைமை தளபதி, முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகம் சார்ந்த மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடந்தது. இதில், முப்படைகளும் சுதந்திரமாக செயல்படவும், எல்லை பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தவும் பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த சூழலில், பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் தற்போதைய சூழல், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

