பத்மஸ்ரீ விருது பெற்றதில் ஆள்மாறாட்டம் – ஐகோர்ட்டு நோட்டீஸ்!

Advertisements

கட்டாக்:

ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 2023-ம் ஆண்டு 106 பேருக்குப் பத்ம விருதுகளை வழங்க ஒப்புதல் அளித்தார்.

விருதுப் பெற்றவர்கள் பட்டியலில் இலக்கியம் மற்றும் கல்விக்கான பங்களிப்புக்காக ஒடிசாவை சேர்ந்த ஸ்ரீஅந்தர்யாமி மிஸ்ரா என்ற பெயர் பத்மஸ்ரீ விருதுக்காக 56-வது இடத்தில் இடம் பெற்றது.

ஒடிசாவை சேர்ந்த பத்திரிகையாளரான அந்தர்யாமி மிஸ்ரா டெல்லிக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

இதற்கிடையே ஒடியா மொழி இலக்கியவாதியும், டாக்டருமான அந்தர்யாமி மிஸ்ரா என்பவர் தனது பெயரில் உள்ள ஒருவர் தன்னை போல ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றதாகக் கூறி ஒடிசா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதில் அவர், ”ஒடியா மற்றும் பிற இந்திய மொழிகளில் 29 புத்தகங்களை எழுதி உள்ளேன். இதற்காக 2023-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

இந்த விருது தவறுதலாகப் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு இலக்கிய பங்களிப்புகள் எதுவும் இல்லை.

விருதுப் பெற்றவர் எந்தப் புத்தகமும் எழுதவில்லை. எனது பெயரில் உள்ளவர் ஆள்மாறாட்டம் செய்து விருது பெற்றார்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஒடிசா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “அரசாங்கத்தின் கடுமையான சரிபார்ப்பு செயல்முறை இருந்தபோதிலும், ஒரே மாதிரியான பெயர்கள் காரணமாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மை குறித்து கவலைகளை எழுப்புகிறது.

விருது யாருக்கு என்பதை உறுதிப்படுத்த தாங்கள் எழுதிய அனைத்து புத்தகங்கள் மற்றும் பொருட்களுடன் இருவரும் வருகிற 24-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்” எனக் கூறி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *