
நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கோவைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததையடுத்து கண்டன பதிவு வெளியிட்டுள்ளார். இதில், கோவைக்கான மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்றுள்ளதாகத் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமது கோரிக்கையை நிராகரித்துள்ளது மத்திய பாஜக அரசு எனக் குற்றம் சாட்டினார். இதை யடுத்து,கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும் என நம்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



