
பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் வீடும் நாடும் முன்னேற்றம் அடையும், அதனைக் கருத்தில் கொண்டே தமிழக முதல்வர் பெண்களுக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார் என்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்டு ரூபாய் 3.கோடியே 23.இலட்சத்து 80.ஆயிரம் மதிப்பீட்டில் 427 பயனாளிகளுக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி.தமிழகத்தில், மக்களின் நலனுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் வீடும் நாடும் முன்னேற்றம் அடையும். அதனைக் கருத்தில் கொண்டே தமிழக முதல்வர் பெண்களுக்கான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றார்.
இன்று ஒரே நேரத்தில் மாவட்டத்தில் 5 ஆயிரம் பேருக்கு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வருகின்றோம். அதன் ஒருபகுதியாகத் தற்போது இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது என்று அப்போது தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி, மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.


