
பிரெஞ்சுக் கலாசாரத்தை பிரதிபலிக்கும் தேவாலயங்கள்!
பிரான்சின் காலனி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்தது புதுச்சேரி. அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறும்போது பிரெஞ்சுக் கலாசாரத்தை மட்டும் அல்லாமல் கலைநயம் மிக்க கட்டடங்களையும் விட்டுச் சென்றனர். அவர்களின் கட்டடக் கலையின் சிறப்புகளை இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கின்றன கிறிஸ்தவ தேவாலயங்கள்.
பல்வேறு தாக்குதல்களைத் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம், சம்பா கோயில் என அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் சான் பால் (san paul) கோவில் என அழைக்கப்பட்டு, சம்பா கோவில் என மருவியது. கி.பி 1689-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்த சேசு சபை குருக்கள், கடற்கரைக்கு மேற்கே ஓர் இடத்தை வாங்கினார். அதில், பிரான்ஸ் மன்னர் 14-ம் லூயி நிதியுதவியுடன் 1692-ல் இந்தத் தேவாலயத்தை அமைத்தார்.
தூய இருதய ஆண்டவர் பேராலயம்:
புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே சுப்பையா சாலையில் அமைந்திருக்கிறது தூய இருதய ஆண்டவர் பேராலயம். 1895-ம் இந்த ஆலயத்தைக் கட்ட முடிவெடுக்கப்பட்டது. 1902-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு 1907-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா, 2008-2009-ம் ஆண்டு நடந்ததும், பசிலிக்காவாக (பேராலயம்) உயர்த்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டது.

புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோயில்)
புதுச்சேரி கடற்கரையை ஒட்டியபடி அமைந்திருக்கும் இந்தத் தேவாலயமும் பல தாக்குதல்களை சந்தித்திருக்கிறது. பிரெஞ்சு, ரோமன் மற்றும் கிரேக்க கட்டடக் கலைகளின் கலவையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். 1674-ம் ஆண்டு புதுச்சேரி வந்த கபுசின்ஸ் சபையைச் சேர்ந்த பிரெஞ்சு பாதிரியார்கள் இந்த இடத்தில் சிறிய அளவிலான பிரார்த்தனைக் கூடத்தை அமைத்தனர். பின்னர், 1739 – 1758-ம் ஆண்டு பெரிய அளவில் கபுசின்ஸ் தேவாலயம் கட்டப்பட்டது.

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் – அரியாங்குப்பம்:
நூற்றாண்டுகளைக் கடந்து விழாக்கோலத்தில் இருக்கும் இந்தத் தேவாலயம் உள்ளடக்கியிருக்கும் வரலாறுகள் ஏராளம். 1690-ம் ஆண்டு பிரெஞ்சு அரசின் அனுமதியுடன் கத்தோலிக்க சிரியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான், புதுச்சேரியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம். தானப்ப முதலியார் என்பவரால் இலவசமாக அளிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டது. மலபார் வியாபாரிகளில் முக்கியமானவரான இவர்தான் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தரகராக இருந்தவர்.


