இன்று ஆரஞ்சு அலெர்ட் !

Advertisements

சென்னை: 

திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (நவ.,21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.

நவ.,23ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.,20) மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.,25ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *