
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டதால் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சீனியர் நிர்வாகிகள் கடும் அதிருப்திக்குள்ளானதாக தகவல் பரவியது. இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் ஓர் அணியும், ஈபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் பிரிந்து மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தின.
இந்நிலையில், அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓஎஸ் மணியன், மரகதம் குமரவேல், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், கேசி கருப்பணன் உள்பட 23 எம்.எல்.ஏக்கள் கொண்ட தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் கடிதம் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக அரசல் புரசலாக பரவிய தகவல் உறுதியானது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், அதன் பின்னணியில் சிவி சண்முகம் முக்கிய பங்காற்றியதாக பேசப்பட்டது. தற்போது உருவாகி உள்ள எஸ்பி வேலுமணி தலைமை, ஈபிஎஸ் தலைமை என்ற பின்னணியிலும் சிவி சண்முகம் இருப்பது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.
எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஈபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக உருவாகுமா? என்ற கேள்விகளுக்கு விரைவில் முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




