முடங்கிய நாடாளுமன்றம்.. தொடர்ந்த எதிர்க்கட்சிகள் அமளி..!

Advertisements

மக்களவையில் இன்று ஆப்பரேசன் சிந்தூர் பற்றிச் சிறப்பு விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக அடுத்தடுத்து இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

மக்களவையில் இன்று ஆப்பரேசன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை பற்றிச் சிறப்பு விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 11 மணிக்கு மக்களவை தொடங்கியதும் காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கையில் அட்டைகளை ஏந்தியபடி அவையின் நடுப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.

அதைக் கண்டித்த அவைத்தலைவர் நாட்டு மக்கள் முழுவதும் உறுப்பினர்களின் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், விவாதம் நடத்த வேண்டுமென்றால் அனைவரும் அவரவர் இருக்கைக்குச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதைச் செவிமடுக்காமல் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையை நண்பகல் வரை ஒத்தி வைத்தார். நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவை மீண்டும் கூடிய பிறகும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி அவையின் நடுப்பகுதிக்கு வந்தனர். இதனால் சினமடைந்த அவைத் தலைவர் ஓம் பிர்லா உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி எச்சரித்தார்.

ஆப்பரேசன் சிந்தூர் பற்றி விவாதம் நடைபெற வேண்டுமா? இல்லையா? என்று வினவினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையைப் பகல் ஒரு மணி வரை ஒத்தி வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *