
உள்ளத்திற்கும் உடலிற்கும் புத்துணர்ச்சி தேவையெனில் நாம் ஒரே இடத்தில் சுழலுவதை விடுத்து 3 மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் சென்று வருவது நல்லது. அதுவும் மலைப் பிரதேசங்கள் சென்றால் மூலிகைக் காற்று சுவாசித்தால் நோய்கள் வரும் வாய்ப்புகள் குறையும்.
ஊட்டி போகலாம் என்றால் எங்கெங்கு போவது பார்க்கலாம் வாங்க..
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் அழகான சுற்றுலா மலை வாசஸ்தல நகரம்தான் ஊட்டி. இங்கு சீறிப்பாயும் அருவிகள், அமைதியான ஏரிகள், அடர்ந்த காடுகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள், பூங்காக்கள், தாவரவியல் பூங்கா, இன்னும் பல உண்டு. மிகச் சிறந்த கோடை வாசஸ்தலமாகும்.
ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் உலகின் உயிர் பன்மைத்துவம் கொண்ட மலைப் பிரதேசமாகும். இயற்கை அன்னையின் புன்னகை பூக்கும் யூகலிப்டஸ் மற்றும் பைன் மரங்கள், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் உண்டு. ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. படகு சவாரி மற்றும் மலையேற்ற வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஊட்டி ஏரி;
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏரி (Ooty Lake) கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். 1824-ஆம் ஆண்டில் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்டது. 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள படகு இல்லம் மிகப் பிரபலமான ஒன்று. ஏரியில் படகு சவாரி வசதி உள்ளது, மேலும் சுற்றுலா பயணிகள் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் அல்லது ரோயிங் படகுகளை வாடகைக்கு எடுக்கலாம்.
தாவரவியல் பூங்கா;
22 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்கா (Botanical Gardens) ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற இடம். இங்கு ஆயிரம் வகையான தாவரங்கள், புதர்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மலர்கள், சூரல்கள், மூலிகைகள், போன்சாய்கள் ரோஜாக்கள் மற்றும் இயற்கையான மலர் கம்பளங்களை வளர்க்கிறது.
தொட்டபெட்டா சிகரம்;
நீலகிரி மாவட்டம், ஊட்டி – கோத்தகிரி சாலையில், தொட்டபெட்டா என்ற மலைச்சிகரம் உள்ளது. ‘பெரிய மலை’ என்று பொருள்படும் தொட்டபெட்டா நீலகிரி மலைத்தொடரின் மிக உயரமான இடமாகவும், உண்மையில் ஊட்டியில் பார்க்க வேண்டிய பிரபலமான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. 2,623 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் (Doddabetta Peak) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். சிகரத்தின் உச்சியில் ஒரு தொலைநோக்கி இல்லம் உள்ளது. சுற்றிலும் மனதைக் கொள்ளை கொள்ளும் பள்ளத்தாக்கைக் காண இரண்டு தொலைநோக்கிகள் உள்ளன.
எமரால்டு ஏரி;
ஊட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த அருமையான எமரால்டு ஏரி. ஏரியின் நீல நீர், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகும். இங்கு வாத்துகள் மற்றும் பிற நீர்வாழ் விலங்குகள் உட்பட பல்வேறு வகையான பறவைகளை நீங்கள் காணலாம். இங்குள்ள சூரிய உதயமும், சூரிய அஸ்தமனமும் பிரமிக்க வைக்கும், தவறவிடக்கூடாத அரிய காட்சிகளாகும்.
முதுமலை தேசியப் பூங்கா;
முதுமலை தேசியப் பூங்கா வன உயிரிகளின் சரணாலயமாகும். இது, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் முச்சந்திப்பில் அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட இப்பகுதி அதிகாரபூர்வ புலிகள் காப்பகமாகும். மேலும் யானை, மலபார் அணில், நீலகிரி லங்கூர், இந்திய பாறை மலைப்பாம்பு, புள்ளி மான், வங்காள புலி மற்றும் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு அழிந்து வரும் உயிரினங்கள் உள்ளன. இந்திய வெள்ளை நிற கழுகுகள் உள்ளன.
ரோஜா தோட்டம்;
அரசு நடத்தும் ரோஜா தோட்டம் ஊட்டியில் மிகவும் பிரபலமானதாகும். ஊட்டியின் பெருமை என்று அழைக்கப்படும் ரோஜா தோட்டம் உலக ரோஜா சங்கங்கள் கூட்டமைப்பின் தெற்காசியாவுக்கான சிறந்த தோட்டத்திற்கான விருதை வென்றுள்ளது. தமிழக அரசால் பராமரிக்கப்படும் இந்த ரோஜா தோட்டத்தில் இந்தியாவிலேயே அதிக வகை ரோஜாக்கள் உள்ளன. ஹைபிரிட் டீ ரோஜாக்கள், ரேம்ப்ளர்கள், மினியேச்சர் ரோஜாக்கள், பச்சை ரோஜாக்கள், கருப்பு ரோஜாக்கள், பாப்பாஜினோ மற்றும் ஃப்ளோரிபுண்டா போன்றவற்றை சுற்றுலாப் பயணிகள் ரசிக்கலாம்.
தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலைத் தொழிற்சாலை;
ஊட்டி நகரம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தேயிலை தொழிற்சாலை ஆகியவை ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாகும். தொட்டபெட்டா சிகரத்திற்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்ட காட்சி முனை (வியூ பாயின்ட்) பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
புனித ஸ்டீபன் தேவாலயம்;
புனித ஸ்டீபன் தேவாலயம் ஊட்டியில் பார்க்க வேண்டிய ஒரு கட்டிடக் கலை அற்புதமாகும். நீலகிரியில் உள்ள பழமையான தேவாலயங்களில் ஒன்றான இந்த தேவாலயம் அதன் விக்டோரியா கால கட்டிடக் கலை, கடிகார கோபுரம் மற்றும் வேலைப்பாடுகள் கொண்ட கண்ணாடி ஜன்னல்களுக்கு பெயர் பெற்றது. தேவாலயத்தின் அமைதியான சூழல் பிரார்த்தனைக்கான ஓர் அழகான ஓய்விடமாக அமைந்துள்ளது.
கேத்ரீன், கல்ஹாத்தி மற்றும் பைக்காரா அருவி;
அருவிகள் என்றாலே பிரமிப்பும் ஆச்சரியமும் அழகும் கலந்த அனுபவமாக இருக்கும். அதிலும் ஊட்டியில் உள்ள இந்த மூன்று அருவிகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஓர் அனுபவமாகும். இவை இயற்கை மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்களாகும். கேத்ரீன் அருவி அதன் வசீகரிக்கும் அழகுக்கு பெயர் பெற்றது. ஊட்டியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்ஹாத்தி அருவி பெல்லிகாவில் அமைந்துள்ளது. இந்த அருவி, பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் பைக்காரா அருவி அழகான அருவியாகும்.
மாரியம்மன் கோயில்;
ஊட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோயிலின் அழகான, ஐந்து நிலை கோபுரம் மிகவும் கவர்ச்சிகரமானது. காளி தேவியின் ஒரு வடிவமாகக் கருதப்படும் மாரியம்மன், மகாமாயி அல்லது சீதளா கௌரி என்றும் அழைக்கப்படுகிறார், இங்கு நவக்கிரகங்கள் தங்கள் துணைவியருடன் இருப்பதால் இந்த மாரியம்மன் கோயில் தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஊட்டியில் செய்ய வேண்டியவை;
தேனிலவு கொண்டாடும் தம்பதிகளாயினும், குடும்பமாயினும் ஊட்டி ரசித்து மகிழ ஏற்ற மலை வாசஸ்தலம். பொம்மை ரயில் பயணம் முதல் தேநீர் சுவை வரை, இந்த அழகான மலை வாசஸ்தலம் பல சாகசங்களையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. பொம்மை ரயில் பயணம், மலையேறும் சாகசம் வளைவுகள், டீட்டர்-டாட்டர்கள் என்று அழைக்கப்படும் மலைப்பாதை மேடு பள்ளங்கள், சுவிட்ச் பேக்குகள், மெது குழிகள், தொங்கு பாலம், ஜம்ப் சாய்வு தளங்கள் அருமையாக இருக்கும்.
சாக்கலேட்;
ஊட்டியில் வீட்டில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. சாரிங் சாலையில் உள்ள பேக்கரிகளில் நுழைந்து பால், டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட், முந்திரி, திராட்சை அல்லது ஸ்ட்ராபெர்ரி என உங்களுக்கு விருப்பமான சுவையைத் தேர்ந்தெடுக்கலாம். சால்வைகள், ஜாக்கெட்டுகள், கையுறைகள், பின்னல் கம்பளி ஆடைகள் மற்றும் குரங்கு தொப்பிகள் போன்ற கம்பளி ஆடைகளுக்கு திபெத்திய சந்தை பிரபலமானது. லோயர் பஜார் சாலையில் ஜவுளிகள் மற்றும் ஆடைகள் முதல் சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.
அப்பப்பா.. என்ன ஊட்டிக்கு போய்விட்டு வந்துவிட்டீர்களா.. படிப்பதற்கே ஆனந்தம் என்றால் சென்று வந்தால் எப்படி இருக்கும்..










