DMK MLA Son And Daughter In Law: எம்.எல்.ஏ. மருமகள் ஆடியோ வெளியிட்டு கெஞ்சல்!

Advertisements

திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா.

இதனிடையே, திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மற்றும் மருமகள் மெர்லினா திருவான்மியூர் சவுத் அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு மாத சம்பளம் அடிப்படையில் ரேகா (வயது 18) என்ற இளம்பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். பல மாதங்களாக ரேகா வீட்டு வேலை செய்துவந்த நிலையில் அவருக்கு பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் ஆண்ட்ரோ மற்றும் அவரது மனைவி மெர்லினா துன்புறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இளம்பெண்ணை ஜாதி ரீதியிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல், ரேகாவை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எம்.எல்.ஏ.வின் மருமகள் மெர்லினா அடித்து துன்புறுத்தியதில் ரேகாவின் தலை, முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டிருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ரேகா நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.எல்.ஏ. மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் திமுக எம்.எல்.ஏ. மருமகள் மெர்லினா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் கூறியதாவது:-

வணக்கம் என் பெயர் மெர்லினா. சமீபத்தில் கடந்த 2, 3 நாட்களாக பிரச்சினை நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சினை எதனால் நடக்கிறது என்று எங்களுக்கு சத்தியமாக புரியவில்லை. நான் ஊடகங்களுக்கு கூறுவது ஒரே விஷயம் தான்… நிறைய கமெண்ட்ஸ் நிறைய கெட்டபெயரால் திட்டுகிறீர்கள். நடந்தது என்ன என்று புரிந்துகொள்ளாமல் இன்னொருவரை தவறாக பேசாதீர்கள். அதுமட்டுமில்லாமல் அரசியல் பின்புலத்தில் இருந்து வருவதால் அதை பயன்படுத்தி அடுத்தவர்களை மிரட்டி கொடுமைக்கார உலகில் நாங்கள் வாழவில்லை. என்னை சுற்றி உள்ளவர்களிடமும் நீங்கள் விசாரிக்கலாம்.

இது ஒரு அபாண்டமான, ரொம்ப கொச்சையான… எப்படி சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு 3 நாட்களாக என்னால் சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், என் மகளையும் என்னால் பார்க்க முடியாமல் இந்த லெவலுக்கு என்னை கொண்டு வந்துவிட்டுள்ளீர்கள். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அந்த பெண்ணை என் வீட்டில் ஒரு பெண்ணாக தான் நான் இதுவரை பார்த்தேன், அது அவளுக்கே நல்லா தெரியும். இந்த தகவலை அந்த பெண்ணிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை. உங்களால் முடிந்தால் நான் கூறும் தகவலை அந்த பெண்ணிடம் கூறிவிடுங்கள்.

ரேகா உனக்கு அக்காளை பத்தி நல்லாவே தெரியும். அக்காள் உன்னை எந்த விதத்திலும் கஷ்ட்டப்படுத்தவேண்டுமென நினைத்ததே இல்லை. உன் பையை ‘பேக்’ பண்ணும்போது தான் உன் கைப்பட எனக்கு கடிதம் எல்லாம் எழுதி வைத்திருக்கிறாய் என்பதை நான் இப்போது தான் பார்க்கிறேன். என்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் நீ எதற்காக இதையெல்லாம் செய்கிறாய். உனக்கு ஏதாவது வேண்டுமானால் அக்காள் இடம் கேட்டு பேசியிருக்கலாமே? எதற்காக நீ இவ்வளவு தூரம் ஒரு குடும்பத்தை பாதிக்க வைத்திருக்கிறார். அதனுடைய தீவிரத்தன்மை உனக்கு புரியாமல் இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறாய்.

இது சரியல்ல, உனக்கு புரியவில்லை. இப்போது என்னை பற்றி, அண்ணனை பற்றி பேசுகிறாய், பாப்பாவை பற்றி பேசுகிறாய் சரி பரவாயில்லை நீ பேசிவிட்டாய். எங்கள் மாமனார் என்னமா பண்ணினார். எத்தனை ஆண்டு உழைப்பு தெரியுமா? இரவும், பகலும் தூங்காமல் எவ்வளவு பேரை பார்த்து கஷ்ட்டப்பட்டு… எங்கள் குடும்பத்திற்குள்ளேயே இதனால் பெரிய பிரச்சினை ஏற்படுமல்லவாமா? அதையெல்லாம் பற்றி நீ யோசிக்கமாட்டாயா? தயவு செய்து நான் உன்னிடம் கூறுகிறேன் எந்த புகார் நீ கொடுப்பதாக இருந்தாலும் நீ எங்களை பற்றி பேசு. ஆனால் நீ பொதுவாழ்வில் இருப்பவர்களை இழுத்து கவனஈர்ப்பு கொண்டுவரவேண்டுமென நினைக்கக்கூடாது. அது சரியில்லை’ இவ்வாறு அவர் கூறினார்.

பணிப்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதி மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *