Cyber Crime-ஆன்லைன் மோசடி ரூ.76 லட்சம் இழப்பு !

Advertisements
சென்னை:
சென்னையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் பணம் கொட்டும் என்ற பேச்சை நம்பி மருத்துவர் ஒருவர் ரூ.76 லட்சத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரங்கள், அறிவிப்புகள் நாள்தோறும் குவிந்து வருகின்றன. இந்த அறிவிப்புகளில் குறிப்பிட்டு உள்ள வாக்குறுதிகள் எந்தளவுக்கு உண்மை என்பதில் இன்னும் ஏராளமான சந்தேகங்கள் இருந்தாலும், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை சிறிதும் குறையவில்லை.

சென்னையில் பிரபல அரசு மருத்துவமனையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் கணேஷ். யுடியூப் ஒன்றில் ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான பயிற்சி வகுப்புகள், ஆலோசனைகள் நடத்தப்படுவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். தொடக்கத்தில் அதை அலட்சியப்படுத்திய அவர், பின்னர், ஒரு வித ஆர்வத்துடன் அந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.

தினமும் புதுப்புது தகவல்கள் என்று கூறி அவருக்கு யுடியூப் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பயிற்சி வகுப்புகள்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள மருத்துவரின் செல்போன் எண்ணை, வாட்ஸ் அப்குழு ஒன்றில் உறுப்பினராக அதன் அட்மின் திவாகர் சிங் என்ற பெயரில் உள்ளவர் சேர்த்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுயுள்ள பலரும் பெரிய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் என வசதி படைத்தவர்களாக இருப்பதாகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளனர்.

பயிற்சியில் சேர்ந்த தொடக்க நாட்களில் ஆன்லைன் வர்த்தகம் என்றால் என்ன, அதில் முதலீடு எப்படி செய்வது, எந்தப் பங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிட்டும் என்று அடிப்படையான விஷயங்கள் பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி விவரங்கள் வாட்ஸ் அப்பில் குறிப்பிடப்படும்போது, அதில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள பலரும், நாங்கள் முதலீடு செய்தோம், ஏராளமான பணம் வருமானமாகக் கிடைத்ததாகக் கூறி உள்ளார்கள்.

அவர்கள் அனைவரும்  தங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட தொகை, வங்கி கணக்கு எண், சேமிப்பு உள்ளிட்ட விவரங்களை ஸ்கீரின் ஷாட்(screen shot) ஆக எடுத்துப் போட்டோக்களாகப் பதிவிட்டு வந்துள்ளனர். தினசரி வகுப்புகளில் பலரும் தாங்கள் அடைந்த லாபத்தை பற்றி விவரங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

வாட்ஸ் அப்குழுவில் இருந்த மருத்துவரும் அந்தத் தகவல்களைத் தொடர்ச்சியாகக் கவனித்துக் கொண்டே வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்யலாம் என்ற எண்ணத்தில் மருத்துவர் வந்துள்ளதை மோப்பம் பிடித்த பயிற்றுநர்கள், பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் 30 சதவீதம் கூடுதல் வருமானத்துடன் லட்சக்கணக்கில் லாபம் வந்து சேரும் என்று ஆசை வார்த்தையும் கூறி இருக்கின்றனர். எந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என்ற பட்டியலை அவருக்குப் பகிர்ந்து தூண்டில் போட்டுள்ளனர்.

பண வரவு செலவுக்கென்று அவருக்குக் கணக்கு ஒன்றையும் தொடங்கி, அதில் முதலீடு செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.தொடக்கத்தில் லட்சம், பின்னர் கோடியில் பணம் கொட்டும் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய மருத்துவரும் அக்டோபர் மாதத்தின் முதல் 3 வாரங்களில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பணம் கட்டி வந்துள்ளார்.

அக்டோபர் 22ம் தேதி முதலீட்டு தொகைக்கான லாபத்தை (கிட்டத்தட்ட ரூ.50 லட்சம்) தமது கணக்கிலிருந்து எடுக்கலாம் என்று மருத்துவர் முயற்சித்தபோது, பலனளிக்கவில்லை. பணம் எடுப்பதற்கு ரூ.50 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட ஏதோ பொறி தட்டியுள்ளது.

மொத்தமாக அவர் செலுத்திய பணம் ரூ.76.50 லட்சமும் போய்விட்டது, தாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த மருத்துவர், உடனடியாகச் சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் இறங்கியபோது, இந்த முறைகேட்டில் ஈடுபட்டது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. மேலும், அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் அனைத்தும் வட மாநிலத்தில் உள்ள வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டு உள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதுகுறித்து போலீசார், மருத்துவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். பணம் வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2 மணிநேரத்தில் அந்தப் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் எவ்வித பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இதே போன்ற சம்பவம் ஒன்று புகாராக எங்களிடம் வந்துள்ளது.

அதில் பாதிக்கப்பட்டவர் ரூ.1.18 கோடியை இழந்துள்ளார். அவர் பணம் கட்டி அடுத்த சில மணி நேரங்களில் நாடு முழுவதும் உள்ள 250 வங்கிகளில் அந்தப் பணம்  எடுக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வண்ணம் வங்கி கணக்குகளை இயக்கி வருகின்றனர் என்பதை கண்டுபிடித்துள்ளோம். எனவே, ஆன்லைன் வர்த்தகம் என்பதில் சிக்கி யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என்ற போலீசார் அறிவுறுத்தியு ள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *