On-air physical fight: அடிதடியில் முடிந்த விவாத நிகழ்ச்சி!

Advertisements

பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவேறு கட்சியினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின்போது, இம்ரான் கான் கட்சியின் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட்டுக்கும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் செனட்டர் அப்னான் உல்லா கானுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இம்ரான் கான் வக்கீல் மார்வாட், அப்னானை தாக்க, பதிலுக்கு அப்னானும் தாக்க, நிகழ்ச்சி நடந்த இடம் போர்க்களமானது.

இதையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அப்னான் தனது எக்ஸ் பக்கத்தில், “மார்வாட் என்னைத் தாக்கினார். பதிலுக்கு நானும் தாக்கினேன்.

எனக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை. அதேசமயம், நான் நவாஸ் ஷெரீப்பின் சிப்பாய். நான் மார்வாட்டைத் தாக்கியது இம்ரான் கான் உட்பட பி.டி.ஐ. கட்சியின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒரு பாடம். இனி அவர்களால் வெளியுலகில் தலைகாட்ட முடியாது. முகமூடி அணிந்துகொண்டுதான் வெளியில் நடமாடவேண்டி இருக்கும்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, மார்வாட் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதவில், “நடந்தது ஒரு விரும்பத் தகாத சம்பவம். நான் அடித்த அடியில், அப்னான் உல்லா ஸ்டூடியோவை விட்டு ஓடி, அருகில் உள்ள அறையில் தஞ்சமடைந்ததார். செனட்டர் மீது அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குத் தொடரவிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இது போன்று அடித்துக் கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2021-ம் ஆண்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் காதர் மண்டோகல், அப்போதைய இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியின் மூத்த தலைவரும், தற்போது இஸ்திகாம் இ பாகிஸ்தான் கட்சியின் நிர்வாகியுமான ஃப்ரிதௌவ்ஸ் ஆசிக் அவான் ஆகியோர் இதுபோன்றதொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதிக்கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *