
முடக்கத்தான் கீரை என்றாலே மூட்டு வழியைப் போக்குவது என்று பலருக்கும் நினைவுக்கு வரும். இக்காலத்தில் நடுத்தர வயதினருக்கும் மூட்டு வலி வருகிறது. ஏனெனில் பெரும்பாலோர் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்க்கின்றனர். ஆதலால் உடல் உழைப்பு அதிகமில்லை. அதனால் உடல் எடையும் கூடுகிறது. அத்துடன் துணை இணைப்பாக மூட்டு வலியும் வருகிறது. இந்த முடக்கத்தான் கீரையை தோசையாகச் செய்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள அனைத்து மூட்டுக்கும் வலிமை கொடுக்கும். அத்துடன் மிளகு சேர்த்திருப்பதால் சளிக்கும் மிகச் சிறந்தது.
முடக்கத்தான் தோசை செய்யத் தேவையான பொருட்கள் இட்லி அரிசி 1/2 கிலோ, முடக்கத்தான் கீரை 1 கட்டு (200 கிராம்), மிளகு, சீரகம் 25 கிராம், உப்பு மற்றும் நல்லெண்ணை தேவையான அளவு.
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசியை போட்டுத் தண்ணீர் ஊற்றிக் குறைந்தது ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின்னர் அந்த அரிசியை நன்றாகக் கழுவி வைத்துக் கொள்ளவும். முடக்கத்தான் கீரையைப்பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை நன்றாக வடிகட்டிக் கிரைண்டரில் போட்டு அத்துடன் அரிந்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை. மிளகு, சீரகம், உப்பு சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். தோசை பதத்துக்கு அரைக்க வேண்டும். அரைபட்டவுடன் கிரைண்டரை நிறுத்தி விடவும். இல்லையென்றால் மாவு மிகவும் மையாக அரைத்துவிடும்.அதனால் களையாக இருக்காது. அதனால் கிரைண்டரை நிறுத்தி மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். முடக்கத்தான் கீரை சேர்த்திருப்பதால் மாவு பச்சை நிறமாக இருக்கும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைக்கயும். கல் காய்ந்தவுடன் மாவை ஒரு கரண்டி எடுத்துத் தோசை போல் தேய்த்து. தோசையை சுற்றி நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். ஒருபக்கம் வெந்தவுடன் தோசையை திருப்பிப் போட்டு மறுபடியும் நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். இரண்டு பக்கமும் வெந்தவுடன், தோசையை எடுத்து விடவும். சத்து நிறைந்த அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்தத் தோசையை எந்தச் சட்னியுடனும் சாப்பிடலாம் அல்லது வெறும் தோசையாகக் கூடச் சாப்பிடலாம்.

