
2000 ஆண்டு வெளியான “பைலட்ஸ்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகக் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான “இது என்ன மாயம்” என்ற தமிழ் திரைப்படம் நடிகையாக அறிமுகத்தைக் கொடுத்தது. இதன் பின்னர் “பைரவா”, “ரஜினி முருகன்”, “மகாநதி”, “சர்கார்”, “அண்ணாத்த” உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சில படங்களிலும் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றிருந்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார். இவருக்குத் திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது. திருமணம் நடைபெற போவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், மாப்பிள்ளை யார் என்பது குறித்த தகவல்கள் சில நாட்கள் முன் வெளிவந்தன.
மாப்பிள்ளையின் பெயர் ஆண்டனி தட்டில். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் சந்தித்து கொண்ட இந்த ஜோடி 15 ஆண்டுகள் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. கீர்த்தி சுரேஷ், பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டனி கொச்சியில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
15 ஆண்டுகளாக இருவரும் நண்பர்களாக இருந்தாலும் சமீப காலத்தில் இருவரும் தங்கள் உறவை வெளிக்காட்டிக் கொள்ளவில்லையாம். இந்த நிலையில் தான், இந்த மாதம் திருமண பந்தத்தில் இருவரும் இணையவுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தனது வருங்கால கணவரான ஆண்டனியுடன், தனக்கு 15 ஆண்டுகளைக் கடந்தும் பந்தம் தொடர்வதாக நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தனது 15 ஆண்டுகால பந்தம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷின் பதிவுக்கு நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

