
தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதைத் தங்களது நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்கான ஒத்திகையென வடகொரியா கருதுகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலைக் கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.
இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை எனப் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.
ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் எனத் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைச் சோதனை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.


