ஜூலை 12. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்த இடத்தில் பா.ஜ., உள்ளது.
மேற்கு வங்கத்தில் 73,887 உள்ளாட்சி பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. தேர்தல் நடந்த 8 ம் தேதி மட்டும் 30 பேர் வன்முறையில் உயிர் இழந்தனர்.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று(ஜூலை 11) காலை துவங்கியது. பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 3,317 கிராம பஞ்சாயத்துகளில் 2,552லும், 232 பஞ்சாயத்து சமீதிகளிலும், மொத்தம் 20 ஜில்லா பரிஷத்களில் 12லும் அம்மாநிலத்தை ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.அதற்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜ., 212 கிராம பஞ்சாயத்துகள், 7 பஞ்சாயத்து சமீதிகளிலும் வெற்றி பெற்றது.
இது தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: கிராமப்புறங்களிலும் திரிணமுல் உள்ளது. அன்பு, ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளேன். மக்கள் மனதில், திரிணமுல் தான் உள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டி உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிக இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.