
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,
சென்னையை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.10,158 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட வடசென்னை அனல்மின் நிலையம்-3 திறக்கப்பட்டு ஓராண்டாகும் நிலையில், இன்று வரை அதில் வணிகரீதியிலான மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை.
வடசென்னை அனல்மின் நிலையம் சரியான நேரத்தில் வணிகரீதியிலான மின்னுற்பத்தியைத் தொடங்கி இருந்தால், இதுவரை 1200 கோடி யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்திருக்கக்கூடும்.
அதன் மூலம் அதே அளவு மின்சாரம் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதை தவிர்த்திருக்கலாம். அதனால், ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மிச்சமாவதாக வைத்துக்கொண்டால் கூட, 11 மாதங்களில் ரூ.2400 கோடி, ஆண்டுக்கு ரூ.2618 கோடி மிச்சமாகியிருந்திருக்கும்.
ஆனால், அவ்வாறு பணம் மிச்சமாவதால் ஆட்சியாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை; தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் மட்டும் தான் அவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதால் தான் மின்னுற்பத்தித் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர் என்று புகார்கள் எழுகின்றன.
மின் திட்டங்களைச் செயல்படுத்தி, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை குறைத்தால் மட்டும் தான் லாபத்தில் நடத்துவது சாத்தியமாகும்.
இதை உணர்ந்து வட சென்னை அனல்மின் நிலையத்தில் வணிகரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கவும், நிலுவையில் உள்ள பிற மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி முடிக்கவும் தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
