திருமாவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – அன்பில் மகேஷ்!

Advertisements

சென்னை:

புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காததற்கு காரணம் கூட்டணி கட்சியின் அழுத்தம் என்று விஜய் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், திருமாவளவன் சுயமரியாதைக்காரர், அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் த.வெ.க. தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாகக் கூறப்பட்டது. பின்னர் விழாவில் பங்கேற்கமாட்டேன் எனத் திருமாவளவன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருப்பதால் விஜய் கலந்து கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியானது.

இதையடுத்து புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்த விஜய்; விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் போய்விட்டது. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூடக் கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்” என்று கூறியிருந்தார். இதற்குத் திருமாவளவன் பதிலடி கொடுத்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்காததற்கான காரணத்தைத் திருமாவளவன் நீண்ட அறிக்கையின் மூலம் விளக்கியிருந்தார்.

இந்நிலையில் திருமாவளவனுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது, எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல இது கொள்கைக்கான கூட்டணி. இந்தக் கூட்டணியில் பிரிவு வந்துவிடாதா என்று பலர் காத்திருக்கின்றனர். அதற்கு நாங்கள் கண்டிப்பாக இடம் தரமாட்டோம். திருமாவளவன் சுயமரியாதைக்காரர்; அவருக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. திருமாவளவன் மிகப்பெரிய தலைவர். அவரை நாங்கள் மதிக்கிறோம். ஆதவ் அர்ஜுனா கருத்துகுறித்து திமுக தலைவர் முடிவெடுப்பார் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *