
ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக இப்படி மோசமாக பேச வேண்டுமா என அதிமுக எம்.பி.சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதுதொடர்பாக சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து அவர் மீது இரு பிரிவினர்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சி.வி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆளுங்கட்சியை எதிர்த்து பேச உரிமை உள்ளது என்றாலும் எதற்காக மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்? என கேள்வி எழுப்பினார். மேலும், முன்பு அமைச்சராக இருந்தவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் வெறும் கைத்தட்டுதல்களுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
மேலும், முன்பு அமைச்சராக இருந்தவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் வெறும் கைத்தட்டுதல்களுக்காக இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார்

