Nirmala Sitharaman: பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் மீண்டும் மோடி அரசு அமையும்!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

இந்தநிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றம் சென்ற மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றார். பட்ஜெட் உரையை ஜனாதிபதியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

புதிய நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
80 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வளர்ச்சியின் பலன்கள் ஏழைகளை அடையத் தொடங்கியுள்ளது. எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

சமூக நீதி அரசியல் கட்சிகளின் கோஷமாக உள்ள நிலையில் சிறந்த நிர்வாகத்தின் மூலம் அதை செயல்படுத்தி வருகிறோம்.யாருக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மதசார்பின்மையை மக்களுக்கான அரசின் திட்டங்கள் மூலம் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் பெரும்பான்மையுடன் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். வீடுகளுக்கு குடிநீர், அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கியாஸ் சிலிண்டர் என பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *