
அசாமில் லோகபிரியா கோபிநாத் பர்தலோய் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் லோகபிரியா கோபிநாத் பர்தலோய் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, விமான நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட அசாமின் முன்னாள் முதலமைச்சர் கோபிநாத் பர்தோலாயின் 80 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.
இதன் பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான புதிய நுழைவுவாயிலாக உருவெடுத்து வருகின்றன என பெருமையுடன் கூறினார்.
மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்திற்கான கட்டிடம் உருவாகியுள்ளது என்றும் இதனால் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும் என்றார்.
இதையடுத்து, கட்டிட கட்டுமானத்தில், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, இயற்கையுடனான தொடர்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை பராமரிக்கப்பட்டு உள்ளன என்று பிரதமர் மோடி பாராட்டுக்கள் தெரிவித்தார்.


