நாட்டின் இப்போதைய தேவைகள், எதிர்காலக் கனவுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே வரிச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சரக்கு சேவை வரிச் சீரமைப்புக் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது, நவராத்திரியின் முதல் நாளில் இருந்து தற்சார்பு இந்தியா என்னும் இலக்கை நோக்கி நாடு அடியெடுத்து வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டார்.
சரக்கு சேவை வரிச் சீரமைப்பு நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் வணிகத்தையும் தொழிலையும் எளிதாக்கும் என்றும், முதலீடுகளை ஈர்க்கும் என்றும் தெரிவித்தார். நகர்நுழைவு வரி, விற்பனை வரி, உற்பத்தி வரி, மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி என்று பலவாறாக இருந்த வரிகள் 2017 ஜூலை முதல் ஒரே வரிமுறையாக மாறியதாகத் தெரிவித்தார்.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பாலேயே பலவாறாக இருந்த வரிமுறை ஒழிக்கப்பட்டுச் சரக்குசேவை வரிமுறைக்கு மாற முடிந்ததாகவும், ஒரேநாடு ஒரே வரிக் கனவு நனவானதாகவும் குறிப்பிட்டார். தாம் ஆட்சிக்கு வந்த பதினோராண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து வெளியேறிப் புதிய நடுத்தர வகுப்பினராக மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர்களுக்குச் சொந்த விருப்பங்களும் கனவுகளும் இருக்கும் என்பதால் ஆண்டுக்கு 12 இலட்ச ரூபாய் வரை வருமான வரியில் இருந்து விலக்களித்துள்ளதாகவும், இப்போது சரக்கு சேவை வரிக்குறைப்பால் அவர்களின் கனவு நனவாவது மேலும் எளிதாகும் என்று தெரிவித்தார்.
வரிச்சீரமைப்பு என்பது தொடர்ச்சியான செயல்முறை என்றும், காலத்தின் மாற்றத்துக்கேற்ப நாட்டின் தேவைகளும் மாறும் என்பதால் சீரமைப்பு தேவை என்றும் குறிப்பிட்டார். நாட்டின் இப்போதைய தேவைகள், எதிர்காலக் கனவுகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே வரிச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடைகளில் உள்நாட்டுப் பொருட்களையே விற்க வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் உள்நாட்டுப் பொருட்களையே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
