
நாடு முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில், அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர் . நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி துர்க்கைக் குன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலையிலேயே வரிசையில் நின்று வழிபட்டனர்.
அயோத்தியில் உள்ள தேவி காளி கோவில் நவராத்திரியையொட்டி மலர்களாலும் மின் விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை முதலே பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கோவிலிலும் நவராத்திரி விழா களைகட்டியுள்ளது. காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்து வரிசையில் நின்று வழிபட்டனர். தில்லியில் உள்ள காளிகோவிலில் நவராத்திரியையொட்டிச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மும்பை நகர மக்களின் கடவுளான மும்பாதேவி கோவிலில் ஒன்பதுநாள் நவராத்திரி விழாக் கொண்டாட்டம் இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி அம்மனுக்குச் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.


