New Delhi:அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டம்: சாலையோர வியாபாரிமீது முதல் வழக்கு!

Advertisements

புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டம் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்த நிலையில் டெல்லியில் சாலையோர வியாபாரிமீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாகப் பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரிமீது இந்தச் சட்டத்தின் கீழ் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கமலா மார்கெட் காவல் நிலையம் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 285-ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் நடைமேடையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்திருந்த வியாபாரிமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காலனிய ஆதிக்கத்துக்கு ஏற்றார்போல் இயற்றப்பட்ட சட்டங்களை எல்லோருக்கும் நீதி பரிபாலனம் செய்யும் சட்டங்களாக மாற்றுவதே இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்” எனத் தெரிவித்திருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *