NEET Exam:நீட் வினாத்தாள் கசிவு- உச்சநீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட மத்திய அரசு!

Advertisements

புதுடெல்லி:இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. அதன் முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன.

நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது போன்ற முறைகேடுகளும் நடந்ததாகப் பேசப்பட்டது.

எனவே, நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள், பெற்றோர் எனப் பலதரப்பினரும் மனுக்கள் தாக்கல் செய்தனர். ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.

இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

நீட் தேர்வு வினாத்தாள் செல்போன் மூலம் கசிந்துள்ளது, பள்ளிகளில் பிரிண்டர்களில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்டுள்ளது. மே 4-ல் டெலிகிராம் சேனலில் நீட் வினாத்தாள், அதன் விடைகளுடனான வீடியோ வெளியிடப்பட்டது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக்கொள்கிறீர்களா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது.

ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *