
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி குறித்து பேசவே கூடாதா? எனச் சீமான் கேள்வி எழுப்பினார்.
சென்னை:நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியை அவதூறாகப் பேசியதற்காகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாகச் சீமான் கூறியதாவது:- புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்? கள்ளச்சாராயம் என்ன காற்றில் பறந்து வருகிறதா? கடத்தி விற்கிறவர்களே நீங்கள்தான்.. கள்ளச்சாராயம் விற்பவர்கள்மீது எல்லாம் பாயாத வழக்கு மேடையில் பேசியதற்காகப் பாய்கிறது. எதற்காகச் சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்.. என்னைவிட அதிகமாகச் சாட்டை துரைமுருகன் பேசிவிட்டாரா… என்னைச் சுற்றியிருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி பற்றித் தவறாகப் பாடியதால், சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். இருந்த பாட்டைப் பாடுவதில் என்ன அவதூறு இருக்கிறது. எழுதியவர், பாடியவரை விட்டுவிட்டு மறுபடியும் எடுத்துப் பாடியவரைக் கைது செய்கிறீர்கள். நான் பாடுகிறேன் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள். திமுகவினர் பேசினால் கருத்துரிமை எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? ” இவ்வாறு ஆவேசமாகப் பேசினார்.


