
அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டுக்குச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து தனது தனி விமானத்தில் பிரேசில் நாட்டுக்குச் சென்று இறங்கினார். ரியோ டி ஜெனிரோ விமான நிலையத்தில் பிரேசில் நாட்டின் அதிகாரிகளும் படை வீரர்களும் அவரை வரவேற்றனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோ லுலா டி சில்வா அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் பதினேழாவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார். நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் 11 ஆண்டுகளில் அவர் பிரேசில் நாட்டில் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும். பிரிக்ஸ் மாநாட்டின் இடையே அவர் உறுப்பு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச உள்ளார்.
அதே போல் பிரேசில் அதிபர் லூயிஸ் இன்னாசியோவுடன் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்த உள்ளார். வணிகம், பாதுகாப்பு, எரியாற்றல், விண்வெளி, தொழில்நுட்பம், வேளாண்மை, நலவாழ்வு ஆகிய துறைகளில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தப் பேச்சு நடைபெற உள்ளதாகக் கூறப்படும்.
ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்ற பிரதமர் அங்குள்ள தங்கும் விடுதிக்குச் சென்றார். பிரேசில் வாழ் இந்தியர்கள் சார்பில் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய வம்சாவளியினரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். பிரேசில்வாழ் இந்தியர்களின் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார். இந்திய இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு மகிழ்ந்தார்.
