தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்!
தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் சிந்திக்க வேண்டும்” எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும், 9வது உச்சிமாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. அதனைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் ஜி20 உறுப்பினர்கள் மற்றும் விருந்தினராக அழைக்கப்பட்ட நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலத்திற்கான பாராளுமன்றங்கள்” எனற தலைப்பில் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி:இன்று உலகம் எதிர்கொள்ளும் மோதல்கள் மற்றும் போர்கள் யாருக்கும் பயனளிக்காது. பிளவுபட்ட உலகம் நம் முன் உள்ள சவால்களுக்குத் தீர்வுகளை வழங்காது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்திற்கான நேரம். இது ஒன்றாகச் சேர்ந்து பயணிக்க வேண்டிய நேரம் என்பதோடு, ஒன்றாக முன்னேற வேண்டிய நேரம். இது அனைவரின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான நேரம்.

பல ஆண்டுகளாக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா சந்தித்து வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, நமது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரத்தில் தீவுரவாதிகள் குறிவைத்தனர். தீவிரவாதம் உலகிற்கு எவ்வளவு பெரிய சவால் என்பதையும், அது மனித குலத்திற்கு எதிரானது என்பதையும் உலகம் உணர்ந்து கொண்டிருக்கிறது.
தீவிரவாதத்தின் வரையறையில் ஒருமித்த கருத்து எட்டப்படாதது வருத்தமளிக்கிறது; மனிதகுலத்தின் எதிரிகள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்து உலகில் உள்ள நாடாளுமன்றங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் சிந்திக்க வேண்டும்” எனப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு:
உச்சி மாநாட்டில் இந்தோனேசியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, ஓமன், ஸ்பெயின், ஐரோப்பிய நாடாளுமன்றம், இத்தாலி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, துருக்கி, நைஜீரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், எகிப்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதோடு, தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
#WATCH | At the 9th P20 summit in Delhi, PM Modi says, “A world full of conflicts and confrontation cannot benefit anyone. A divided world cannot give solutions to the challenges before us. This is a time for peace and brotherhood, a time to move together, a time to move forward… pic.twitter.com/XisUaVClYB
— ANI (@ANI) October 13, 2023

