மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘அக்வான்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று தீவிர புயலாக நிலவக்கூடும். இது மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 20ஆம் தேதி நண்பகலில் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திர கடற்கரையில் மிக தீவிர புயலாக கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்தக் காற்று வீசக்கூடும். மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

