மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? – சீமான் கேள்வி!

மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வினவியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கார்குடி ஊராட்சியில் உள்ள அரசு மதுபானக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடியும், அவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழ்நாடு அரசு இழுத்தடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார். மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு நடுவில், காய்கறிச் சந்தை, கோவிலுக்கு அருகில் மதுக்கடையைத் திறந்து வைத்திருப்பது ஏன்? என்று வினவியுள்ளார். மேலும் மக்களுக்காக அரசு நடத்துகிறீர்களா? இல்லை, மதுக்கடை நடத்துவதற்காக மக்களை ஆளுகிறீர்களா? என்றும் வினவியுள்ளார். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிர்வாகத்திற்கு, மக்களிடம் மீண்டும் கால அவகாசம் கேட்க என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடையை மூடக்கோரி கடந்த 18 ஆம் தேதி போராடிய பொதுமக்கள் 80 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாடு அரசும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் இனியும் காலம் கடத்தாமல், மதுபானக் கடையை  நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *