Narayanan Thirupathy: மின்சார பஸ்களை கொள்முதல் செய்யக் கோரிக்கை!

சென்னை: ‘டீசல் பஸ்கள் கொள்முதல் செய்வதை ரத்து செய்துவிட்டு, மின்சார பஸ்களை கொள்முதல் செய்ய, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்’ என, தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கையில் :பருவநிலை மாற்றத்தின் பிடியில் உலகம் சிக்கி தவிக்கிறது. மத்திய அரசு, சென்னை உள்பட நாடு முழுதும் உள்ள, 169 நகரங்களுக்கு, 57,000 கோடி ரூபாய் செலவில், 10,000 மின்சார பஸ்களை வாங்க, ஆகஸ்டில் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும், 2030க்குள், 50,000 மின்சார பஸ்கள் இயக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனால், காற்று மாசு பெருமளவில் குறையும். பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் போராட்டத்தில், இது பெரும் பங்கு வகிக்கும்.

தமிழக அரசு போக்குவரத்து கழகம், நகர பகுதிகள் பயன்பாட்டிற்காக, 552 டீசல் பஸ்களை, அசோக் லேலண்ட் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய, ஜெர்மன் அபிவிருத்தி வங்கியிடம், கடனுதவி பெற உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இந்தப் பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

புதிய பஸ்களை கொள்முதல் செய்வது வரவேற்கத்தக்கது. அதேநேரம், அவை மின்சார பஸ்களாக இருக்க வேண்டும். இனி, நகரப் பகுதிகளில் மின்சார பஸ்களை இயக்குவது என்ற கொள்கை முடிவை, தமிழக அரசு ஏற்கனவே எடுத்து உள்ளது.

எனவே, முதல்வர் ஸ்டாலின், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் முயற்சியாக, டீசல் பஸ்கள் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து, மின்சார பஸ்களை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *