தலைவர் நல்லக்கண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை.!

மறைந்த முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணுவிற்கு, இறுதி அஞ்சலி செலுத்தி, வீர வணக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கமிட்டார். வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று காலமானார்.

அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரின் உடல், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகமான, பாலன் இல்லத்தில் வைக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று மாலை 4 மணியளவில் நல்லகண்ணுவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்துகொண்டு நல்லகண்ணுவிற்கு, மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது, வீர வணக்கம், வீர வணக்கம், தகைசால் தமிழருக்கு வீர வணக்கம், வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம், செவ்வணக்கம், என உணர்ச்சிவசத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.

அவரைப் பின்தொடர்ந்து பலரும் முழக்கமிட்டனர். தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னர் நல்லகண்ணுவின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அவரது விருப்பப்படி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது,  அவரது இறுதி ஊர்வலத்திலும் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *