லட்சங்களை மறுத்து லட்சியத்தையே சுவாசித்தவர்..!

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு அவர் பிறந்த திருவைகுண்டம் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு ராமசாமி – மாரியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

தனது 18ஆவது வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பல்வேறு போராட்டங்கள் நிறைந்த அவரது அரசியல் வாழ்வில் 1940-களில் நடைபெற்ற நெல்லைச் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, சுமார் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தார். தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கவும், மணல் கொள்ளையைத் தடுக்கவும் மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று போராடினார்.
அரசியல்வாதிகள் என்றாலே ஆடம்பரம் என்று நினைக்கும் காலத்தில், நல்லகண்ணு ஒரு விதிவிலக்காக எளிமையின் அடையாளமாக வாழ்ந்தார்.

தமிழக அரசு இவருக்கு வழங்கிய ‘அம்பேத்கர் விருது’க்கான பரிசுத் தொகையையும், ‘மணிவிழா’ நடத்திக் கட்சி வழங்கிய ஒரு கோடி ரூபாய் நிதியையும் அப்படியே கட்சிக்கும், நலிந்தவர்களுக்கும் வழங்கினார்.
சென்னையில் தனக்கெனச் சொந்தமாக வீடு கூட வைத்துக்கொள்ளாமல், நீண்ட காலம் வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். பின்னர் தமிழக அரசு அவருக்கு ஒரு வீட்டை ஒதுக்கியபோதும், அதை ஏற்க மறுத்துப் பொதுவாழ்விலேயே கவனம் செலுத்தினார்.
கட்சித் தலைவராக இருந்தபோதும் பேருந்திலும் ரயில்களிலுமே சாதாரண மனிதனாகப் பயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றினார். கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இவரது பொதுத் தொண்டைப் பாராட்டி 2022ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குத் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.
அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் அவர் பிறந்த திருவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு அரசு மருத்துவமனை எனப் பெயர் மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், நல்லகண்ணு மறைவு திருவைகுண்டம் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *