ஒப்பந்தப் பணிகளை ஒதுக்குவதற்கே 20 சதவீதம் கமிஷன் கேட்பதாக தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் வசூலிக்க ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? எனவும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி என்ன நடந்தது? டிடிவி தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன? விரிவாகப் பார்க்கலாம்…..
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் VB-G RAM G திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் தவெக நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்க முயற்சி நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ஊராட்சி ஒன்றியத்தில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் வரை கமிஷன் கோரப்படுவதாகவும், இதுதொடர்பாக சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி மீது புகார் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகங்கை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை கட்டப்பஞ்சாயத்து, கமிஷன் வசூல், அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் எனப் பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மக்கள் நலத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.மேலும், “யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என்று கூறி லஞ்சம் கொடுக்காதீர்கள்” என மக்களுக்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் ஜோசப் விஜய்,
தனது அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதன் விளைவாகவே, ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது 20 சதவீதம் வரை கமிஷன் என்ற பெயரில் ‘சர்வீஸ் சார்ஜ்’ கேட்பதாகப் புகார் எழுந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊழலை ஒழித்து, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி, அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் எனத் தேர்தல் பரப்புரையின்போது உறுதியளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தற்போது தனது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தொடர்ந்து எழுந்துவரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பாரா? அல்லது இந்தப் புகார்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்காமல் தொடர்ந்து மௌனம் காப்பாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சி அமைந்தது முதல் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அரசு பதவிகளைப் பெற்றுத் தருவதற்காக ரூ.5 கோடி வரை லஞ்சப் பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார்கள் என, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
அதேபோல், சிவகங்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் மீதான 20 சதவீத கமிஷன் புகாரையும் அலட்சியப்படுத்தாமல், விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



