அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் டிரம்பை நேரடியாகக் நக்கல் நையாண்டி செய்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் காற்றை விட வேகமான பரவி வருகிறது.
ஈரான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், டிரம்பைப் போன்ற உருவம் கொண்ட நபரை சிலர் தூக்கிச் சென்று குப்பைத் தொட்டியில் தொபீர்னு வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் குப்பைத் தொட்டியில் ஆங்கிலத்தில் ‘Hazardous Waste’ என எழுதப்பட்டுள்ளது. இதற்கு தமிழில் ‘ஆபத்தான கழிவுகள்’ என்று பொருள்.
இந்த வீடியோவுடன், ‘அமெரிக்க இடைக்காலத் தேர்தல்’ என்ற வாசகத்தையும், சிரிக்கும் எமோஜியையும் ஈரான் தூதரகம் பதிவிட்டுள்ளது. இது டிரம்பின் குடியரசுக் கட்சிக்குக் கிடைத்த தேர்தல் பின்னடைவை நையாண்டி செய்யும் வகையில் அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட நையாண்டி வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், அதுதான் தற்போது நிதர்சான உண்மை என்கிறார்கள் பலரும்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகள் மற்றும் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில் அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டிரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பதை ஈரான் தனக்குச் சாதகமான அரசியல் நிகழ்வாகப் பார்க்கிறது.
மேலும், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப், அமெரிக்க மக்கள் போர் வேண்டாம் என்ற செய்தியைத் தேர்தல் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். போர் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்க மக்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைப் பெற்றிருப்பது டிரம்ப் நிர்வாகத்துக்குச் சவாலாக அமையலாம். அரசின் கொள்கைகள், ராணுவச் செலவுகள் மற்றும் ஈரான் தொடர்பான முடிவுகள் குறித்து ஜனநாயகக் கட்சியினர் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மாறுவதால் மட்டும் அமெரிக்க அதிபரின் பதவி பறிபோய்விடாது. டிரம்ப் தொடர்ந்து அதிபராகச் செயல்படுவார். இப்படி அமெரிக்க அதிபரையே குப்பைத் தொட்டியில் வீசுவதுபோன்ற வீடியோவை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகமே வெளியிட்டிருப்பது சர்வதேச அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.



