பாலியல் வன்கொடுமை வழக்கு – வீரமணி மீது நடவடிக்கை எடுக்க முதலவர் விஜய் உத்தரவு!

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 2025 ஆம் ஆண்டு விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒரு புகாரை தெரிவித்தார்.  அதில், “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்ததாகவும், அவர் ‘பென்டிரைவ்’ ஒன்றை கொடுத்ததாகவும் தெரிவித்தார். அதில் பிரபல தொழில் அதிபரான ‘ஜெம்ஸ் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட ‘வீடியோ’ காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 2025 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் தொடர் விசாரணையில், தொழில் அதிபர் வீரமணி, சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அதில், சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை தொழில் அதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. தொடர்ந்து, பல சிறுமிகளை சீரழித்த தொழில் அதிபர் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்கன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்புப்பிரிவு காவல்துறையினர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் உத்தரவையடுத்து கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விபசார தடுப்பு பிரிவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *