தமிழக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் வினவியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சென்னை கோடம்பாக்கத்தில், 16 வயது சிறுவனை மதுபோதையில் ஆழ்த்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில், வடபழனி காவல் நிலையத் தலைமை காவலர் வேலப்பன் போக்ஸோ சட்டத்தில், கைது செய்யப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்தார்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவல்துறை அதிகாரியே இத்தகைய கீழ்த்தரமான குற்றத்தில் ஈடுபட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கே தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இக்கொடூர நிகழ்வே மிகச்சிறந்த சான்றாகும் என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறை தன் கடமையிலிருந்து முற்றிலும் தவறிவிட்டதையே இது காட்டுகிறது என்று கூறினார். குற்றம் சாட்டப்பட்ட வேலப்பன் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அவரைப் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும்.
இந்த வழக்கை விரைந்து விசாரித்து, அவருக்குச் சட்டப்படியான மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தகுந்த மனநல ஆலோசனையும், அந்தக் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *