
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதிக்கு சைக்கிளில் வந்த முதியவர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால், ட்ரை சைக்கிளில் கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் சிறுத்தொண்ட நல்லூர் அடுத்த மணலூர் பகுதியை சேர்ந்த முதியவர் கார்த்தீசன் என்பவர், சைக்கிளில் ஏரல் வந்த போது, தூத்துக்குடியிலிருந்து ஏரல் வழியாக, திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக சைக்கிளில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட முதியவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ_க்கு தகவல் தெரிவித்தனர்.
அரை மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், ட்ரை சைக்கிளில் முதியவரை ஏற்றிக் கொண்டு, அருகிலுள்ள ஏரல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை வி.ஜி.சரவணன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரடியாக வந்து, முதலுதவி சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஆம்புலன்ஸ் தாமதமாக வருவதற்கு காரணம் என்ன என்று விசாரித்த சட்டமன்ற உறுப்பினர் சரவணன், விரைந்து வரும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து, 45 நிமிடங்கள் தாமதமாக வந்த ஆம்புலன்ஸில், முதியவர் கார்த்தீசனை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், ஏரலில் போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆம்புலன்ஸ் சேவையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



