
பொது சிவில் சட்டம் செல்லாது! நாகாலாந்து அரசு அதிரடி…
கோஹிமா: மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும் நாகாலாந்து மாநிலத்தில் அமல்படுத்த முடியாது வகையில் தங்களுக்கு அரசியல் சாசனத்தின் 371A-ன் கீழ் சிறப்பு அதிகாரம் இருக்கிறது என அம்மாநில சட்டசபை அதிரடியாக முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை எப்படியும் மத்திய அரசு நிறைவேற்றும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து நாகாலாந்து மாநில சட்டசபையில் பொது சிவில் சட்டம்குறித்த விவாதம் நடைபெற்றது.
அம்மாநிலத்தில் ஆளும் அரசில் இடம் பெற்றுள்ள பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பொது சிவில் சட்டம் இந்தியா முழுவதும் அமலானாலும் நாகாலாந்தில் அமல்படுத்த முடியாது; அரசியல் சாசனத்தின் 371A-ன் கீழ் நாகாலாந்துக்கு சிறப்பு அதிகாரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது; ஆகையால் பொது சிவில் சட்டம், நாகாலாந்தில் செல்லாது என அம்மாநில சட்டசபை கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது சிவில் சட்டத்திலிருந்து நாகாலாந்து மாநிலத்துக்கு விலக்கு அளிக்கக் கோருகிற பொது தீர்மானம் ஒன்றும் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றபட உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவுச் சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அதனை மத்திய பாஜக அரசு நீக்கியது.
ஆனால் நாகாலாந்து, இந்தியாவுடன் இணைகிறபோது அம்மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்க வகை செய்தது 371-A பிரிவு. இதன் படி மத அடிப்படையிலான இந்திய நாடாளுமன்ற சட்டங்கள் நாகாலாந்து மாநிலத்துக்குப் பொருந்தாது என்பது நடைமுறை. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள நாகாலாந்து அரசியல் தலைவர்கள், இந்திய அரசு ஒப்புக் கொண்டு நடைமுறையில் இருப்பதுதான் 371-A பிரிவு. அதேபோல 16 அம்ச திட்டத்தையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.
ஆனால் மத்திய அரசே தாம் ஏற்றுக் கொண்டதை நிராகரிக்கும் வகையில் செயல்படாது என நம்புகிறோம் என்றனர். நாகாலாந்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவின் மாநில தலைவர் தெம்ஜென் இன்னா அலாங் கூறுகையில், நாகாலாந்து மாநில சட்டசபை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்றார்.



