
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளன. பதில் தாக்குதல் நடக்கக் கூடும் என்று முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவமும் மத்தியக் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து செயல்படும் இராணுவமும் இணைந்து ஈரான் நாட்டின் மீது வான்வழியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலையடுத்து தலைநகர் டெகரானில் இருந்து ஈரானின் உயர் தலைவர் அயத்துல்லா கமேனி தனது இருப்பிடத்தைப் பாதுகாப்பான வேறிடத்துக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் வான்வழித் தாக்குதல் நடத்தும் என்பதால் இஸ்ரேலில் வான்வழித் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் போர்ப்பதற்றத்தால் பள்ளிகள், பணியிடங்கள் ஆகியன மூடப்படுவதாகவும் அறிவித்துள்ளது. தனது விமான நிலையங்களில் பயணிகள் விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் விமான நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.




