N. Sankaraiah’s Death: முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

Advertisements

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

போராட்டமும் சிறையுமே வாழ்க்கையாகக் கழித்தவர் முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் சங்கரய்யா. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபோதுதான் சங்கரய்யாவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். உழைப்பாளர்களின் உற்ற தோழனாக நின்று பல போராட்டங்களை முன்னெடுத்த தோழர் சங்கரய்யா, பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் தனது இறுதி மூச்சு வரை கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்புடன் இருந்தார்.

1922ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி பிறந்த சங்கரய்யா மாணவ பருவத்திலேயே இடது சாரி இயக்கங்கள்மீது கொண்ட ஈர்ப்பால், 1940களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோதே, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கலகக் குரல் எழுப்பினார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, மதுரை மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயலாளராக நியமிக்கப்பட்ட சங்கரய்யா, மாணவர் சங்கம்மூலம் மாணவர்களை ஒன்று திரட்டிப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றார். இதனிடையே, தன்னை கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைத்துக் கொண்டார்.


சுதந்திரப் போராட்டம் வலுப்பெற்றிருந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றச் செய்து விடுதலை வேட்கையை தூண்டியதன் விளைவாக, இறுதியாண்டு பரீட்சைக்கு 15 நாட்கள் முன்பாகச் சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. 18 மாதங்கள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்தவர் அடுத்தடுத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போர்க்குணத்துடன் போரடியதால் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார் சங்கரய்யா. சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் சிறை சென்ற சங்கரய்யா, தலைமறைவாக இருந்தபடியே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தார்.

1964ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து சிலர் வெளியேறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினர். அதில் சங்கரய்யாவும் ஒருவர். 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதி, 1977 மற்றும் 1980இல் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியரும், தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியரும் சங்கரய்யாதான். அந்தச் சமயத்தில் பொதுவுடைமைச் சித்தாந்தங்களைத் தனது எழுத்தின் மூலம் மக்களிடம் சென்றடையச் செய்தார்.

இப்படி வாழ்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா. அவருக்கு வயது 102. சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சங்கரய்யாவை, அவரது மகன் நரசிம்மன், தென் சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் வேல்முருகன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், உடனிருந்து கவனித்தனர். இந்நிலையில், சளி, காய்ச்சல், மூச்சு திணறல் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த சங்கரய்யாவின் உயிர் இன்று (நவ.,15) அப்பல்லோ மருத்துவமனையில் பிரிந்தது

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பர்சன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அஞ்சலி செலுத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் உடல் இன்று 12 மணிக்குக் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 3 மணிக்குக் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டுவரப்படும்.

நாளை இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி.பாமக நிறுவனர் ராமதாஸ், அண்ணாமலை, டிடிவி தினகரன், உள்ளிடோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *