Mutharasan:நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

Advertisements

நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டவரை மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மத்திய அரசின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று (12.09.2024) கோவை நகரில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் முதலீட்டாளர்களைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜி.எஸ்.டி. வரி ஏழை மக்களையும், உணவகம் போன்ற சிறு தொழில் செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்பதை எளிய முறையில் எடுத்துக்கூறி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் உள்ள முரண்பாடுகளைச் சீரமைத்து, சிறு வணிகம் மற்றும் தொழில் பிரிவுகளுக்கு முற்றிலும் விலக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்தப் பொது நிகழ்வு சமூக ஊடகங்களில் விரிவாகப் பரவி நாட்டின் கவனத்தை ஈர்த்தது.

அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சுட்டிக்காட்டிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் நாடு முழுவதும் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் முறையீட்டை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி, அவரது ஆதரவாளர்கள், அதிகார வர்க்கத்தினர் அன்னபூர்ணா உணவக உரிமையாளரைத் தனியாக, நிதி மந்திரி தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.

மத்திய நிதி மந்திரியின் கலந்தாலோசணைக் கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது? அங்கு நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டது குற்றமா? முறையீடுகுறித்து வாய் திறக்காத நிதி மந்திரி, தவறான வரி விதிப்பை திருத்தியமைக்க முன் வராமல், முறையிட்டவரை தனித்து அழைத்து மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.

பங்குச் சந்தை வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் செபி நிறுவனத்தின் தலைவரும், அவரது வாழ்க்கை இணையரும் அதானி நிறுவனத்துடன் இணைந்து செய்துள்ள முறைகேடுபற்றி எழுந்துள்ள புகார்குறித்து வாய் திறக்காத நிதி மந்திரி, சாதாரண உணவக உரிமையாளரை மிரட்டி மன்னிப்புக் கேட்க வைத்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமானப்படுத்திய மத்திய நிதி மந்திரி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *