
காவிரி விவகாரம் தொடர்பாக மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு வேதனையளிப்பதாகத் தெரிவித்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி வழங்க வேண்டிய அளவைக் காட்டிலும் கூடுதலாகவே தமிழகத்திற்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மாநிலத்தில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஆணையத்திடம் தங்களது மறுப்பைத் தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, இரு மாநில மக்களின் நலன் கருதி தமிழக முதல்வர் விஜய்யுடன் தொலைபேசியில் பேசியதாகவும், மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் போராட்டங்கள் காரணமாக அவர் கர்நாடகா வருவதைத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கக் கோரியுள்ளதாகவும் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
விருந்தினராக வரும் தமிழக முதல்வருக்கு எவ்விதப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதால், நிலைமை சீரானதும் இருவரும் நேரில் சந்தித்துப் பேசலாம் எனவும் அவர் கூறினார்.


