
அம்மை நோய்க்குப் பெயர் பெற்ற குலசை முத்தாரம்மன்!
முப்பெரும் தேவிகளும் ஒரே சக்தியாக உருவெடுத்து மகிஷாசுரனை வதம் செய்ததை தசரா, விஜயதசமி பண்டிகையாக இந்தியா முழுவதும் இந்து மக்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். மைசூருக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் உள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை வருடந்தோறும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் உள்ள ஒரு சின்னக் கிராமம் தான் குலசேகரப்பட்டணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர் ஆட்சி காலத்தில் ஒரு முக்கிய துறைமுகமாக விளங்கிய கிராமம் தான் இந்தக் குலசேகரபட்டணம். பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த குலசேகர பாண்டியனுக்கு அம்பாள் இந்த இடத்தில் காட்சியளித்தால் இந்த ஊருக்குக் குலசேகரப்பட்டினம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.

குலசையில் உள்ள முத்தாரம்மன் கோவில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலில் மூலவராக ஞானமூர்த்தீஸ்வரர் மற்றும் முத்தாரம்மன். அம்மன் இங்குச் சுயம்புவாகத் தோன்றியுள்ளனர். முத்தை ஆற வைக்கும் அம்மன் அதனால் முத்தாரம்மன் என்று பக்தர்கள் அம்மனை அழைப்பதாக வரலாறு உள்ளது. அதாவது முத்தாக உடலில் உருவாகும் அம்மை நோயை ஆற வைத்துக் குணப்படுத்தும் அம்மன் ஆதலால் முத்தாரம்மன் என்று அம்மனை அழைக்கின்றனர்.
முத்தாரம்மன் கோவில் வரலாறு:
அம்மன் மகிஷாசுரனை வதம் செய்தபிறகு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கச் சிவனை வேண்டித் தவம் மேற்கொள்கிறார். அப்போது அம்மன் முன் காட்சி கொடுத்த சிவபெருமான் அந்தத் தோஷத்தை நீக்கி என்ன வரம் வேண்டும் என்று கேட்கும்பொழுது.

முத்தாரம்மன் நீங்கள் எனது அருகிலேயே இங்கு வீற்றிருந்து என்னை வணங்க வரும் பக்தர்களுக்கு உங்களுடைய அருளை எனது பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். முத்தாரம்மனின் வரத்தினால் சிவனும் பார்வதியும் ஒரே பீடத்தில் அவதரித்து இங்குக் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
தசரா பண்டிகை:
பக்தர்கள் குலசையில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்காக விரதமிருந்து தசரா பண்டிகையன்று காளி வேடம் போட்டு முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வழிபடுவது இந்தக் கோவிலின் சிறப்பு. வேடமிட்டு அம்மனை வழிபடுவது குலசை தசரா பண்டிகையின் சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது. நாளைக் கொடியேற்றத்துடன் தசரா பண்டிகை தொடங்கஉள்ளது.

இதற்காகப் பக்தர்கள் பலர் அன்று மாலை அணிவித்துக் கொண்டு விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த வருடம் பல லட்ச பக்தர்கள் தசரா பண்டிகையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாதி பாகுபாடின்றி சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாகக் கொண்டாட உள்ளனர்.




